பிரதமருடன் உரையாடும் வாய்ப்பு – வாழ்வின் முக்கியமான தருணம் என கபடி வீராங்கனை நெகிழ்ச்சி
கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தின் மூலம் இளம் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள், அவர்களின் வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருவதாக போட்டியில் பங்கேற்ற வீரர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் காணொலி வழியாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, போட்டியில் வெற்றி பெற்ற நேசிகா என்ற கபடி வீராங்கனையுடன் நேரடியாக கலந்துரையாடினார். அவரது விளையாட்டு சாதனைகளை பாராட்டிய பிரதமர், எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நேசிகா, தன்னை ஒரு விளையாட்டு வீராங்கனையாக அடையாளப்படுத்திக் கொள்ள கேலோ இந்தியா திட்டம் பெரிதும் உதவியாக இருந்ததாக கூறினார். இந்தத் திட்டத்தின் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான மேடை கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பிரதமரிடம் நேரடியாக பேசும் வாய்ப்பு கிடைத்தது தனது வாழ்வில் மறக்க முடியாத முக்கிய தருணம் என்றும், அது தனக்கு பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளதாகவும் நேசிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த வாய்ப்பை ஏற்படுத்தி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், கேலோ இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்தார். இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா திட்டம், நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.