உலகின் 29 நாடுகளுக்கான தூதர்களை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு
உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் 29 அமெரிக்க தூதர்களை திரும்ப அழைக்கும் முடிவை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதிலிருந்து, “அமெரிக்காவுக்கு முன்னுரிமை” என்ற கொள்கையை மையமாகக் கொண்டு தனது நிர்வாகத்தை செயல்படுத்தி வருகிறார்.
அந்த கொள்கையின் ஒரு பகுதியாக, தமது நிர்வாகத்தின் அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஒத்துழைக்கும் நபர்களை மட்டுமே தூதர்களாக நியமிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, உலகின் 29 நாடுகளில் பணியாற்றி வரும் அமெரிக்க தூதர்களை திரும்பப் பெற அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவின்படி, ஆப்ரிக்கா கண்டத்தில் பணியாற்றி வந்த 13 தூதர்கள், ஆசிய நாடுகளில் பணியாற்றிய 10 தூதர்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்த 4 தூதர்கள் என மொத்தம் 29 தூதர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த 29 தூதர்களும் முந்தைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு வரும் ஜனவரி மாதத்திற்குள் தங்கள் பதவிகளை ஒப்படைத்து அமெரிக்காவுக்கு திரும்ப வேண்டும் என அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, எதிர்வரும் காலங்களில் அந்நாட்டின் வெளிநாட்டு உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் மற்றும் சர்வதேச உறவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், புதிய தூதர் நியமனங்கள் மூலம் டிரம்ப் நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கை மேலும் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.