வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகளுக்கு தீவைப்பு – “யாராலும் காப்பாற்ற முடியாது” என பகிரங்க மிரட்டல்
வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகமான இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்டகாங் உள்ளிட்ட பகுதிகளில் இந்துக்களுக்கு சொந்தமான வீடுகளை கலவரக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனுடன், இந்துக்களை யாராலும் காப்பாற்ற முடியாது என பகிரங்க மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம், ‘இன்குலாப் மஞ்ச்’ என்ற மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் பல பகுதிகளில் பதற்றம் நிலவத் தொடங்கியது. இந்த சம்பவத்துக்குப் பிறகு வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு இந்து இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அதே மாணவர் அமைப்பைச் சேர்ந்த மற்றொரு முக்கிய தலைவரான முகமது மொதாலெப் சிக்தார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு, சிட்டகாங் பகுதியில் உள்ள இந்துக்களின் குடியிருப்புகளை கலவரக்காரர்கள் குறிவைத்து தாக்கியுள்ளனர். பல வீடுகள் தீக்கிரையாகியுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே, இந்துக்களை அச்சுறுத்தும் வகையில் ஒரு பதாகையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பதாகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்துக்கள் நிறுத்தவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், இந்துக்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் மிரட்டும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக வங்கதேச அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகாத நிலையில், நாட்டில் சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. நிலைமையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.