உலக முதலீடுகளை ஈர்க்க சீனாவின் தீவிர முயற்சி :
“சுதந்திர வர்த்தக துறைமுகம்” ஆக மாற்றப்பட்ட ஹைனான் தீவு
உலகளாவிய முதலீடுகளை கவர்ந்து, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், சீனா ஹைனான் தீவை முழுமையான வரி விலக்கு பெற்ற சுதந்திர வர்த்தக மண்டலமாக மாற்றியுள்ளது. இந்த முக்கிய முடிவின் பின்னணி மற்றும் அதன் தாக்கங்களை விரிவாகப் பார்ப்போம்.
உலகின் பல நாடுகள், குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட சில பெரிய பொருளாதார சக்திகள், இறக்குமதி வரிகளை உயர்த்தி வர்த்தக தடைகளை விதிப்பதன் மூலம் தங்கள் சந்தைகளை மூடிவரும் சூழலில், சீனா அதற்கு முற்றிலும் மாறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், தென் சீனக் கடலில் அமைந்துள்ள ஹைனான் தீவை, உலகின் மிகப்பெரிய திறந்த வர்த்தக துறைமுகமாக மாற்றும் திட்டத்தை சீன அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரை விட சுமார் 50 மடங்கு பரப்பளவு கொண்ட ஹைனான் தீவு, தற்போது ஒரே சுங்க அமைப்பின் கீழ் செயல்படும் உலகின் மிகப்பெரிய “Free Trade Port” ஆக வளர்ச்சி பெற்று வருகிறது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய சிறப்பு சுங்க விதிகளின்படி, சுமார் 74 சதவீத பொருட்களுக்கு முழு வரிவிலக்கு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு இந்த சலுகை 21 சதவீத பொருட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இந்த மாற்றத்தின் மூலம், உலகளாவிய நிறுவனங்கள் குறைந்த செலவில் தங்கள் பொருட்களை ஹைனானுக்குள் கொண்டு வர முடியும். மேலும், அங்கு குறைந்தபட்சம் 30 சதவீதம் மதிப்பு கூட்டல் செய்யப்பட்ட பொருட்களை, சீனாவின் பிரதான நகரங்களுக்கு எந்த வரியும் இன்றி அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், ஹைனான் தீவு வெறும் பொருட்கள் பரிமாற்றம் செய்யும் மையமாக இல்லாமல், உற்பத்தி, செயலாக்கம் மற்றும் விநியோக சங்கிலி நடவடிக்கைகளுக்கான முக்கிய தளமாக உருவாகும் வகையில் சீனா திட்டமிட்டு செயல்படுகிறது. குறிப்பாக, ஹைனானில் பதிவு செய்யப்பட்ட தகுதியான நிறுவனங்களுக்கு, வெறும் 15 சதவீத கார்ப்பரேட் வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இது சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள 25 சதவீத வரியையும், ஹாங்காங்கின் 16.5 சதவீத வரியையும் விட குறைவானது என்பதால், பல நிறுவனங்கள் ஹைனானில் தங்களை பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
இதற்கு மேலாக, திறமையான தொழிலாளர்களுக்கு விதிக்கப்படும் வருமான வரியும் அதிகபட்சமாக 15 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது சீனாவின் பிற பகுதிகளில் விதிக்கப்படும் 45 சதவீத வரியுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவானதாகும். அதேபோல், சுங்க நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இயந்திரங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கு இருந்த உரிமக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. நிர்வாக தடைகளும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால், எல்லை தாண்டிய வர்த்தகம் வேகமாகவும் சீராகவும் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த புதிய நடவடிக்கைகள் முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதன் விளைவாக சீனா மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகளில் பங்குகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. சிமென்ஸ் எனர்ஜி உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே ஹைனானில் தங்கள் முதலீடுகளை தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 14.6 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடுகள் ஹைனானுக்கு வந்துள்ளன.
ஹைனான் “Free Trade Port”-ஐ சீனாவின் புதிய உலகளாவிய திறந்த வர்த்தக நுழைவாயிலாக மாற்ற வேண்டும் என சீனாவின் துணை பிரதமர் ஹே லிஃபெங் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் ஏற்பட்ட சரிவை மாற்றி, 2026ஆம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் வேகப்படுத்த இந்த திட்டம் முக்கிய பங்காற்றும் என சீன அரசு நம்புகிறது.
உலகம் முழுவதும் வர்த்தக கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், ஹைனான் தீவை சுதந்திர வர்த்தக மண்டலமாக மாற்றியுள்ள சீனாவின் இந்த முயற்சி, 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய வர்த்தக தாராளமயமாக்கல் நடவடிக்கைகளில் ஒன்றாக பொருளாதார நிபுணர்களால் மதிப்பிடப்படுகிறது