சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் கற்பூர ஆழி பவனி – பக்தர்களால் களைகட்டிய சன்னிதானம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பணியாளர்கள் ஏற்பாடு செய்த கற்பூர ஆழி பவனி காரணமாக சன்னிதான பகுதி திருவிழா சூழலில் திகழ்ந்தது.
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பணியாற்றும் தேவஸ்வம் போர்டு ஊழியர்கள் சார்பில் ஆண்டுதோறும் இந்த கற்பூர ஆழி ஊர்வலம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில், வழக்கத்தை விட அதிக சிறப்புடனும் பிரம்மாண்டமாகவும் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மாலை தீபாராதனை நிறைவடைந்ததையடுத்து, கோயில் கொடிமரத்தின் அருகே வட்ட வடிவிலான பெரிய பாத்திரத்தில் கற்பூரம் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டது. பின்னர் தந்திரி, மேல்சாந்தி மற்றும் நம்பூதிரிகள் இணைந்து தீபம் ஏற்றி கற்பூர ஆழி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர்.
அதன்பின், இரண்டு தேவஸ்வம் ஊழியர்கள் பாத்திரத்தை இருபுறங்களிலும் பிடித்து ஆட்டியபடி நகர்த்திச் சென்றனர். அப்போது கற்பூரத்தில் எழுந்த தீப்பிழம்புகள் மேல்நோக்கி பறந்து பக்தர்களை பக்திபரவசத்தில் ஆழ்த்தின.
கோயிலை சுற்றிவந்து, மாளிகப்புரம் அம்மன் கோயில் சன்னிதானம் மற்றும் நடைபந்தல் பகுதிகளை வலம் வந்த இந்த ஊர்வலம், பதினெட்டாம் படிக்கு முன்பாக நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சரண முழக்கங்களை எழுப்பியபடி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.