பொய்யான குற்றச்சாட்டால் பலியான இந்து இளைஞர் – வங்கதேசத்தில் அதிர்ச்சி திருப்பம்
வங்கதேசத்தில் இந்து சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், போலீசார் நடத்திய விசாரணை புதிய உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மத நிந்தனை செய்ததாகக் கூறி அவர் கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் பரவிய தகவல்கள், தற்போது திட்டமிட்ட கொலை என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைமென்சிங் மாவட்டத்தின் பாலுகா பகுதியைச் சேர்ந்தவர் திபு சந்திர தாஸ். 30 வயதான இவர், திருமணமானவர்; ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. Pioneer Knit Composite என்ற ஆடைத் தொழிற்சாலையில் ஃப்ளோர் மேனேஜராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 18ஆம் தேதி, இஸ்லாம் மற்றும் முகமது நபி குறித்து அவதூறாகப் பேசியதாக திபு சந்திர தாஸ் மீது தகவல் பரப்பப்பட்டது. இதையடுத்து, அவர் பணியாற்றிய தொழிற்சாலை முன்பு பெரும் எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் திரண்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் தொழிற்சாலையின் வாயிலை உடைத்து உள்ளே புகுந்து திபு சந்திர தாஸை தாக்கினர். பின்னர், அவரை வெளியே இழுத்துச் சென்று கொடூரமாக அடித்து கொலை செய்தனர்.
ஆரம்பத்தில், இந்த கொலை மத நிந்தனையால் நிகழ்ந்ததாக கூறப்பட்டது. ஆனால், போலீசார் மேற்கொண்ட விசாரணை அந்தக் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், இந்தச் சம்பவம் திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
தொழிற்சாலையில் திபு சந்திர தாஸ் மேற்பார்வையாளர் (Supervisor) பதவிக்கு உயர முயற்சி செய்ததால், சில ஊழியர்களுடன் அவருக்கு முன்விரோதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், சம்பவம் நடந்த அதே நாளில் அவர் திடீரெனப் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதனுடன், மதத்தை அவமதித்ததாகக் கூறி அவர்மீது பொய்யான குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
அன்றைய தினம் மாலை 5 மணியளவில், தொழிற்சாலைக்குள் திபு சந்திர தாஸுக்கு எதிராக ஊழியர்கள் குழு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சிறிது நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் தொழிற்சாலை முன்பு குவிந்தனர். வெளியே இருந்த கும்பலிடம் அவர் சிக்கினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை தொழிற்சாலையில் இருந்தவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
ஆனால், அவரைக் காப்பாற்ற முயற்சிக்காமல், தொழிற்சாலை நிர்வாகமே அவரை வெளியே அழைத்துச் சென்று வன்முறைக் கும்பலிடம் ஒப்படைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், அந்தக் கும்பல் திபு சந்திர தாஸை கொடூரமாகத் தாக்கி சம்பவ இடத்திலேயே கொலை செய்தது.
இதிலும் அவர்களின் வன்முறை நிற்கவில்லை. அவரது உடலை நிர்வாணமாக்கி மரத்தில் தொங்கவிட்டு மீண்டும் தாக்கியதுடன், பின்னர் தீ வைத்து எரித்துள்ளனர். இந்தச் செயல் அப்பகுதியையே உலுக்கியுள்ளது.
சரியான நேரத்தில் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தால் இந்தக் கொலை தடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால், தொழிற்சாலை நிர்வாகம் இரவு 8 மணியளவில்தான் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி காவல் கண்காணிப்பாளர் முகமது ஃபர்ஹாத் ஹூசைன் கூறுகையில்,
“போராட்டம் தொடங்கியிருந்த போதிலும், தாமதமாகவே எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு புறப்பட்டோம். ஆனால், கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஏற்பட்டது. சென்றபோது, திபு சந்திர தாஸ் கொல்லப்பட்டிருந்தார். முன்பே தகவல் கிடைத்திருந்தால், அவரது உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்” என்றார்.
போலீசார் விசாரணையில், திபு சந்திர தாஸுக்கும் தொழிற்சாலையில் பணியாற்றிய சிலருக்கும் முன்கூட்டியே விரோதம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் மத நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும், அவரை பாதுகாப்பதற்கு பதிலாக வன்முறையாளர்களிடம் ஒப்படைத்ததும் மிகக் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது.
இந்த வழக்கில், தொழிற்சாலையின் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்து இளைஞரின் படுகொலை தொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெறும் விசாரணையில், இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் உள்ள மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.