வங்கதேசத்தில் நீடிக்கும் கலவரம் – இன்னொரு அரசியல் தலைவரை குறிவைத்த துப்பாக்கிச் சூடு
வங்கதேசத்தில் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலைக்குப் பின்னர், மேலும் ஒரு முக்கிய அரசியல் பிரமுகர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த உஸ்மான் ஹாடி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பல நகரங்களில் கலவரம் பரவி, குறிப்பாக இந்து சமூகத்தினருக்கு எதிராக தாக்குதல்கள் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தேசிய குடிமக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகமது மொதாலெப் சிக்தார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில், அவருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதாகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஸ்மான் ஹாடி கொலைக்குப் பின்னர், தொடர்ச்சியாக அரசியல் தலைவர்களை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெறுவது, வங்கதேசத்தில் பாதுகாப்பு நிலை குறித்து கடும் கவலைகளை எழுப்பியுள்ளது.