ஒராண்டுக்கு இந்தியர்களின் அமெரிக்க விசா பெறுதலில் தடங்கல்!
அமெரிக்க வெளியுறவுத் துறை அமல்படுத்தியுள்ள புதிய சமூக ஊடக கண்காணிப்பு விதிமுறைகள் காரணமாக, H-1B விசாவுக்கான அனைத்து நேர்காணல்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் எதிரொலியாக, வெளிநாட்டு பயணங்களை தற்காலிகமாக தவிர்க்குமாறு கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. இது தொடர்பான விரிவான செய்தி தொகுப்பு.
அமெரிக்காவில் அறிவியல், மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணிதம் போன்ற உயர் நிபுணத்துவத் துறைகளில் வெளிநாட்டு திறமையாளர்களை பணியமர்த்துவதற்காக H-1B விசா வழங்கப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்படுவதால், உள்ளூர் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக நீண்ட காலமாக விமர்சனங்கள் எழுந்து வந்தன.
இந்தப் பின்னணியில், கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், H-1B விசா கட்டணத்தை சுமார் 88 லட்சம் ரூபாய் வரை உயர்த்தினார். அதோடு, H-1B விசா மட்டுமின்றி, பிற அமெரிக்க விசா விண்ணப்பங்களுக்கும் சமூக ஊடக ஆய்வை கட்டாயமாக்கும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.
இந்த புதிய நடைமுறையின் படி, H-1B விசா விண்ணப்பதாரர்களும், அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களும் கட்டாயமாக ஆன்லைன் செயல்பாடு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவர். மேலும், இந்தக் கடுமையான சோதனை நடைமுறை F, M, J வகை விசாக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக, விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக ஊடக கணக்குகளை பொதுவில் பகிர வேண்டிய கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை அவசியம் என விளக்கம் அளித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை, விசா வழங்கல் என்பது ஒரு பாதுகாப்பு சார்ந்த முக்கிய முடிவு என்றும், விண்ணப்பதாரர்கள் அமெரிக்க நலன்களுக்கு எதிரான நோக்கங்களுடன் செயல்படவில்லை என்பதை உறுதி செய்ய தீவிர சோதனைகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஆனால், இந்த புதிய விதிமுறை ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டமைக்கப்பட்ட சரிபார்ப்பு முறையிலிருந்து, தூதரக அதிகாரிகளின் தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் செயல்படும் நிலைக்கு மாற்றுவதாக குடிவரவு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் விளைவாக, விசா நிராகரிக்கப்பட்டால் அதற்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், முன்னதாகவே சரிபார்க்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குக் கூட, அவர்களின் பழைய சமூக ஊடக பதிவுகள் காரணமாக விசா மறுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. முக்கிய விண்ணப்பதாரர் மட்டுமின்றி, அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக சமூக ஊடக சோதனைகள் நடத்தப்படுவதால், நிராகரிப்பு வாய்ப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், புதிய சமூக ஊடக ஆய்வு கொள்கையின் காரணமாக நேர்காணல்கள் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை பல விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளது. மேலும், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட நேர்காணல் தேதிகளில் தூதரகத்திற்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
H-1B விசா திட்டத்தை பெரிதும் சார்ந்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகள், இந்த புதிய கொள்கையால் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அவற்றின் வளர்ச்சியும் கணிசமாக பாதிக்கப்படலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களின் ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வெளியிட்டுள்ள தரவின்படி, மொத்த H-1B விசா பெற்றவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.