மீண்டும் வர்த்தக வழியாக மாறுமா பெட்ரா நகரம்?
ஜோர்டானில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க பெட்ரா நகரத்தை மீண்டும் சர்வதேச வர்த்தக பாதையாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அதற்கான பின்னணி என்ன? என்பதை இச்செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சமீபத்தில் ஜோர்டான் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் உரையாற்றும் போது, புவியியல் அமைப்புகளை வளர்ச்சி வாய்ப்புகளாக மாற்றுவது குறித்து ஜோர்டான் மன்னருடன் விரிவாக ஆலோசித்ததாக தெரிவித்தார். அப்போது, ஒருகாலத்தில் இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே நடந்த வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமாக பெட்ரா நகரம் இருந்தது என்றும், அந்த வரலாற்றுப் பாதையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பெட்ரா வழியாக இந்தியா – ஐரோப்பா வர்த்தகம் மீண்டும் சாத்தியமா? என்ற கேள்வி சர்வதேச அளவில் விவாதமாகியுள்ளது. ஜோர்டான் தலைநகர் அம்மானில் இருந்து சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெட்ரா, சவுதி அரேபியா, எகிப்து, சிரியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளை இணைக்கும் முக்கிய சந்திப்புப் புள்ளியாக விளங்கியது.
கிமு 4ஆம் நூற்றாண்டில், பெட்ரா உலகின் முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்தது. ‘பெட்ரா’ என்ற சொல்லுக்கு பாறை என்பது பொருள். பெரும்பாலான கட்டிடங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டதால் இந்த நகரம் அந்தப் பெயரை பெற்றது.
கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பாவுக்கு பொருட்கள் செல்லும் பிரதான நிலப்பாதை பெட்ரா வழியாகவே அமைந்திருந்தது. அரேபியா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் இருந்து வாசனைப் பொருட்கள், சீனாவிலிருந்து பட்டு, இந்தியாவிலிருந்து மசாலா வகைகள், தேயிலை, பருத்தி துணிகள், நகைகள் மற்றும் வைரங்கள் போன்றவை இந்த நகரம் வழியாக ஐரோப்பிய சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த வர்த்தகப் பொருட்கள் பெரும்பாலும் குஜராத் துறைமுகப் பகுதிகளிலிருந்து புறப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. கடல் வாணிபம் பரவலாக உருவாகும் முன், பாலைவனங்களை கடக்கும் நிலப் பாதைகளே வர்த்தகத்தின் முதன்மை வழிகளாக இருந்தன. ஒட்டகங்களில் சரக்குகளை ஏற்றி பயணித்த வணிகர்கள், பெட்ராவில் தங்கி ஓய்வெடுத்த பின்னர் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
பெட்ரா வழியாகச் செல்லும் வணிகர்கள் சுமார் 25 சதவீதம் வரை சுங்க வரி செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடும் இருந்தது. இதன் காரணமாகவே அந்த நகரம் அபரிமிதமான செல்வ வளத்துடன் திகழ்ந்தது.
இந்த முக்கியத்துவத்தை உணர்ந்த ரோமானிய பேரரசு, பெட்ராவை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில், இந்த நகரம் ஹஜ் யாத்திரைக்கான முக்கியப் பாதையாக மாறியது.
காலப்போக்கில் வர்த்தக பாதையாக இருந்த பெட்ரா தனது முக்கியத்துவத்தை இழந்தது. 1985ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, இது ஒரு முக்கிய சுற்றுலா மையமாக மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான், பெட்ராவின் வரலாற்றுச் சிறப்பை மீண்டும் பொருளாதார வளர்ச்சியுடன் இணைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அதற்காக, ஜோர்டானின் பெட்ரா மற்றும் இந்தியாவின் எல்லோரா இடையே இரட்டை நகர (Twin City) ஒப்பந்தம் ஒன்றிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
இரண்டு பகுதிகளும் குடைவரை பாறை கட்டிடங்களுக்குப் புகழ்பெற்றவை என்பதால், அவற்றின் பண்பாட்டு அடையாளங்களையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
பெட்ரா நகரை மீண்டும் ஒரு சர்வதேச வர்த்தக வழித்தடமாக மாற்றும் சாத்தியக்கூறுகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அதற்கான நடைமுறை நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.