வடகிழக்கு விமான போக்குவரத்தில் புதிய திருப்புமுனை!
அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த புதிய முனையம், வடகிழக்கு இந்தியாவின் விமான போக்குவரத்து வளர்ச்சிக்கு ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. அதன் சிறப்பம்சங்களை விளக்கும் செய்தித் தொகுப்பிது.
கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள இந்த நவீன முனையம், வடகிழக்கு மாநிலங்களின் விமான இணைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. சுமார் 4,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த முனையம், “பாம்பூ ஆர்க்கிட்ஸ்” என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை சார்ந்த கட்டிட வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் விமான முனையமாக இது திகழ்கிறது.
சுமார் 1.4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த புதிய முனையம், ஆண்டுக்கு சுமார் 1 கோடியே 30 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மேம்படுத்தப்பட்ட ஓடுபாதை வசதிகளால் ஒரு மணி நேரத்திற்கு 34 விமானங்கள் வரை இயக்கவும் அனுமதிக்கும் திறன் இதற்கு உள்ளது.
இந்த முனையத்தின் கட்டிடக்கலை, வடகிழக்கு இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் இயற்கை வளங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 140 டன் மூங்கில் பொருட்கள், கட்டிடத்திற்கு தனித்துவமான அழகை வழங்குகின்றன. 57 காபோக் பூ வடிவ தூண்கள், காசிரங்கா தேசியப் பூங்காவின் வன உயிரினச் சின்னங்கள், ஜாபி கலை நுட்பங்கள் மற்றும் மஜூலி தீவின் பாரம்பரிய வடிவமைப்புகள் ஆகியவை பயணிகளை கவரும் அம்சங்களாக அமைந்துள்ளன.
மேலும், விமானத்தில் இருந்து இறங்கும் பயணிகள் முனையத்திற்குள் நுழையும்போது “ஸ்கை ஃபாரெஸ்ட்” என அழைக்கப்படும் இயற்கை சூழலை அனுபவிக்க முடியும். சுமார் ஒரு லட்சம் உள்ளூர் தாவரங்கள் அமைக்கப்பட்டுள்ள இந்த பகுதி, இயற்கை காற்றோட்டத்துடன் அமைதியான சூழலை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், கவுகாத்தியில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய விமான முனையம், வடகிழக்கு இந்தியாவின் விமான சேவைகளுக்கு புதிய தரத்தை உருவாக்கும் முக்கியமான மையமாக உருவெடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.