நியூசிலாந்தில் சீக்கியர்களின் பேரணிக்கு தடையாக நின்ற அடையாளம் தெரியாத குழு
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் சீக்கியர்கள் நடத்திய பேரணியில், அடையாளம் தெரியாத ஒரு குழு அத்துமீறி நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய சம்பவத்திற்கு சீக்கிய சமூகத் தலைவர்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
ஆக்லாந்து நகரின் கிரேட் சவுத் ரோடு பகுதியில், கடந்த 20-ஆம் தேதி சீக்கிய சமூகத்தினர் அமைதியான பேரணியை நடத்தினர். அந்த நேரத்தில், “நியூசிலாந்தின் உண்மையான தேசபக்தர்கள்” என்ற பெயரில் இயங்கும் அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் அதிகமான நபர்கள், பேரணியை எதிர்த்து வந்து அதை நிறுத்த முயன்றனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் நியூசிலாந்தின் பழங்குடியினரான மாவோரி மக்களின் பாரம்பரிய கலை வடிவமான ஹக்கா நடனத்தை ஆடினர். அப்போது, “இது எங்களுடைய நாடு, எங்களுடைய நிலம், இது இந்தியா அல்ல, நியூசிலாந்து” போன்ற பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
அத்துடன், கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவான கோஷங்களையும் அவர்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தேவையற்ற பதற்றத்தையும் தூண்டுதலையும் ஏற்படுத்தும் செயலாக இருப்பதாகக் கூறி, நியூசிலாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவர்கள் ஒருமித்த குரலில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.