ரேப் இசைக்கு மனிதர்களைப் போலவே அசத்திய நடன ரோபோக்கள்!
சீனாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், ரேப் பாடல்களின் தாளத்திற்கு மனிதர்களுக்கு சமமான துல்லியத்துடன் ரோபோக்கள் நடனமாடிய காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரோபோ தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக நாடுகளைவிட சீனா முன்னணியில் உள்ளது. 2013ஆம் ஆண்டிலிருந்து தொழில்துறை ரோபோக்கள் பயன்பாட்டில் சீனா மிகப்பெரிய சந்தையாக திகழ்ந்து வருகிறது.
4,500 மனிதர்களுக்கு ஒரு மனிதவடிவ ரோபோ என்ற இலக்கை அடிப்படையாக கொண்டு, ஹியூமனாய்டு ரோபோக்கள் உருவாக்கத்தை சீன அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
பாதுகாப்பு, தொழில்துறை, ஆபத்தான பணிகள் போன்ற மனிதர்கள் செய்ய கடினமான வேலைகளை ரோபோக்களிடம் ஒப்படைக்கும் நோக்கில், பல்வேறு புதுமையான கண்டுபிடிப்புகளை சீனா தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், தொழில்நுட்பத்துடன் மட்டுமல்லாமல் கலை மற்றும் பொழுதுபோக்கு துறைகளிலும் ரோபோக்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன. அதன்படி, சீனாவின் செங்டு நகரில் நடைபெற்ற அமெரிக்க வம்சாவளி இசைக்கலைஞர் வாங் லீஹோம் நிகழ்ச்சியில், மேடையில் ரோபோக்களும் பங்கேற்றன.
யூனிட்ரீ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த நவீன ரோபோக்கள், பயிற்சி பெற்ற நடனக் கலைஞர்களைப் போல தாளம் தவறாமல் அசர வைக்கும் நடன அசைவுகளை வெளிப்படுத்தின.
ரோபோக்களின் இந்த அபார நடனத் திறன் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.