நாடு முழுவதும் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் கட்டண மாற்றம்
நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி முதல் ரயில் பயண கட்டணங்களில் மாற்றம் செய்யப்படுவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த புதிய கட்டண முறையின் படி, முன்பதிவு செய்யாத பொதுப் பெட்டிகளில் 215 கிலோமீட்டரை கடந்த பயணங்களுக்கு, ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 215 கிலோமீட்டருக்கு மேலாக பயணிக்கும் ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்பு பயணிகளுக்கு, கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.
ஏசி அல்லாத பெட்டிகளில் 500 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் பயணிகள், இதனால் கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், பொதுப் பெட்டிகளில் 215 கிலோமீட்டர் வரையிலான பயணங்களுக்கு எந்தவித கட்டண மாற்றமும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், புறநகர் ரயில் சேவைகளிலும், சீசன் டிக்கெட்டுகளிலும் கட்டண உயர்வு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண மாற்றத்தின் மூலம், நடப்பு ஆண்டில் சுமார் 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரயில்வே நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது.