மெஸ்ஸியுடன் புகைப்படம் – ரூ.30 லட்சம் வரை வசூல்: பல கோடி நிதி முறைகேடு புகார்
கால்பந்து உலகின் மாபெரும் நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பல கோடி ரூபாய் அளவில் நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கடும் புகார்கள் எழுந்துள்ளன.
மெஸ்ஸியின் கொல்கத்தா வருகையின் போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான சதத்ரு தத்தா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), விசாரணையில் பல கோடி ரூபாய் அளவிலான முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளது.
விசாரணையில், மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க விரும்பிய ரசிகர்களிடமிருந்து தலா 10 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த தொகைக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வ ரசீதுகளோ அல்லது கணக்கு பதிவுகளோ இல்லை என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மைதானத்தில் 66 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வசதி இருந்த போதிலும், விற்கப்பட்ட டிக்கெட்டுகளில் சுமார் 50 சதவீதத்திற்கான வருவாய் கணக்கில் காட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெஸ்ஸிக்கு 89 கோடி ரூபாய் ஊதியமாகவும், அரசுக்கு 11 கோடி ரூபாய் வரியாகவும் செலுத்தியதாக சதத்ரு தத்தா கூறியுள்ளார். ஆனால், டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் கிடைத்த வருமானம், இந்தச் செலவுகளுடன் பொருந்தவில்லை என்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சதத்ரு தத்தாவின் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 22 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிதி முறைகேடு தொடர்பான விசாரணையை புலனாய்வுக் குழு தீவிரப்படுத்தியுள்ளது