ஆந்திராவில் ரயிலில் இருந்து விழுந்து தம்பதி உயிரிழப்பு – சண்டை வீடியோ வெளியீடு
ஆந்திர மாநிலத்தில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தம்பதி ஒருவர் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் இறப்புக்கு முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ராவு பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கொரடா சிங்காசலம் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பவானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரயிலில் உறவினர் இல்லத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பயணத்தின் போது கணவன்-மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரயில் கதவின் அருகே நின்றபடி வாக்குவாதம் செய்த அவர்கள், சில நிமிடங்களுக்குள் ரயிலில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இருவரும் ரயிலில் இருந்து விழுவதற்கு முன்பு கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது திட்டமிட்ட கொலையா, தற்கொலையா அல்லது எதிர்பாராத விபத்தா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.