வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் – நேபாளத்தில் எழுந்த கண்டனப் போராட்டம்
வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரை குறிவைத்து நடைபெறும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து, அண்டை நாடான நேபாளத்தில் பரபரப்பான போராட்டங்கள் நடைபெற்றன.
வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாடி சமீபத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 18ஆம் தேதி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.
அந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு, ஒரு இந்து இளைஞரை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கி கொலை செய்ததுடன், அவரது உடலை பொதுவழியில் வைத்து தீயிட்டு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக வங்கதேசம் முழுவதும் கலவர சூழல் நிலவி வரும் நிலையில், அங்கு இந்துக்கள் திட்டமிட்டு தாக்கப்படுவதாக குற்றம் சாட்டி, நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, காத்மண்டுவில் உள்ள வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.