ஐயப்ப பக்தர்களுக்கு இலவச ஸ்ட்ரெச்சர் உதவி சேவை
சபரிமலையில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 68 இளைஞர்கள் இணைந்து, ஐயப்ப பக்தர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி ஸ்ட்ரெச்சர் சேவையை வழங்கி வருவது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் தற்போது மண்டல–மகரவிளக்கு பூஜை நடைபெற்று வரும் நிலையில், தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தப் பக்தர்களில் வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். அவர்கள் பாரம்பரிய காடுவழிப் பாதைகளிலும், பம்பையிலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரம் மலை ஏறிச் செல்லும் போது கடுமையான உடல் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறு சிரமப்படுவோருக்கு உதவும் நோக்கில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 68 பேர் கொண்ட இளைஞர் குழு ஸ்ட்ரெச்சர்களுடன் சபரிமலையில் தங்கி சேவை செய்து வருகிறது.
நடக்க இயலாமல் தளர்ந்து போகும் பக்தர்களை சன்னிதானம் வரை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதும், முதுமை அல்லது உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்படுபவர்களை அருகிலுள்ள மருத்துவ முகாம்களுக்கு கொண்டு சேர்ப்பதும் இவர்களின் சேவைகளில் அடங்கும். இவை அனைத்தும் முழுமையாக இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த குழுவில் உள்ளவர்கள் அனைவரும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றி வருவோராவர். ஐயப்பனுக்கு சேவை செய்வதே பெரும் பாக்கியம் என்ற எண்ணத்தில், தங்கள் பணியிடங்களில் விடுப்பு எடுத்தே இந்தக் கட்டணமில்லா சேவையில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.