ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் : வைகுண்ட ஏகாதசி 2ஆம் நாள் விழா கோலாகலம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில், மார்கழி மாதத்தை ஒட்டி நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் மிகுந்த பக்தி உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றன.
108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாக விளங்கும் இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கமாகும். அவற்றில், மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிக முக்கியத்துவம் பெற்றதாகும்.
இந்த திருவிழா பகல்பத்து, ராப்பத்து மற்றும் இயற்பா ஆகிய மூன்று கட்டங்களாக மொத்தம் 21 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.
இரண்டாவது நாள் நிகழ்வின் போது, நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் தங்கக் கிளி, முத்துச் சாய் கொண்டை, வைர அபயஹஸ்தம், பவள மாலை உள்ளிட்ட அபூர்வ அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.