ரஷ்யா–உக்ரைன் சமாதான முயற்சிகள் முதல் நடுவண் தேர்தல்கள் வரை… டிரம்ப் அரசுக்கு சவால்கள் நிறைந்த 2026
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் சமாதான பேச்சுவார்த்தைகள், வெனிசுலாவை நோக்கிய அமெரிக்க கடற்படை நடவடிக்கைகள், விரைவில் நடைபெறவுள்ள நடுவண் தேர்தல்கள் மற்றும் 2026 FIFA உலகக் கோப்பை உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் ஒன்றிணைந்து, வரவிருக்கும் 2026-ம் ஆண்டை அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு கடினமான சோதனைக்காலமாக மாற்றியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவி ஏற்று நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறார். அவரது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டு, பல திடீர் மற்றும் சர்ச்சைக்குரிய முடிவுகளால் பரபரப்பாக நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அவரது பதவிக்காலத்தின் இரண்டாவது ஆண்டு வெறும் நிர்வாக நடவடிக்கைகளுக்கான காலமாக மட்டுமல்லாமல், அவரது அரசியல் எதிர்காலத்தையும் வரலாற்றில் அவர் பெறப்போகும் இடத்தையும் தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக அமையும் என அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
இந்த ஆண்டின் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுவது, ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முன்னெடுத்து வரும் சமாதான முயற்சிகளாகும். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முன்வைக்கும் சில யோசனைகள், ஐரோப்பிய நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, உக்ரைனின் சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் தொடர்வதை ஏற்கும் போக்கு மற்றும் நேட்டோ அமைப்பின் விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும் என்ற கருத்துகள், அமெரிக்காவின் பாரம்பரிய வெளிநாட்டு கொள்கைகளுக்கு எதிரானவை என விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.
இதற்கிடையில், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை குறிவைத்து அமெரிக்கா கடற்படை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, பொருளாதார ரீதியில் அரசை பலவீனப்படுத்துவதன் மூலம் அரசியல் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் இந்த அணுகுமுறை, அப்பகுதியில் மனிதாபிமான நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என்றும், பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் சர்வதேச அளவில் கவலைகள் எழுந்துள்ளன. இதே சமயத்தில், 2026-ம் ஆண்டு FIFA உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற இருப்பதும் உலகின் கவனத்தை அந்நாட்டின் மீது திருப்பியுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து நடத்தும் இந்தப் பெரும் விளையாட்டு நிகழ்வு, டிரம்ப் நிர்வாகத்தின் திறனை உலகிற்கு காட்டும் ஒரு முக்கிய மேடையாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், பயணக் கட்டுப்பாடுகள், விசா தொடர்பான சிக்கல்கள் மற்றும் டிக்கெட் விலைவாசி உயர்வு போன்ற காரணங்கள், சர்வதேச ரசிகர்கள் மற்றும் நாடுகளிடையே அமெரிக்காவுக்கு எதிரான விமர்சனங்களை உருவாக்கியுள்ளன. இதனைவிட முக்கியமாக, 2026-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள நடுவண் தேர்தல்கள், டிரம்ப் அரசாங்கத்திற்கு மிகப் பெரிய அரசியல் சோதனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு நடைபெறும் இந்தத் தேர்தல்களின் முடிவுகள், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்திற்கான மக்களின் மதிப்பீடாகக் கருதப்படும். தேர்தல் நடைமுறைகள் குறித்த சந்தேகங்கள், அரசியல் பிளவுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் ஆகியவை இணைந்து, தேர்தல் சூழலை மேலும் பதற்றமூட்டியுள்ளன.
மொத்தத்தில், 2026-ம் ஆண்டு டிரம்ப் நிர்வாகத்திற்கு வெளிநாட்டு கொள்கைகளை மறுசீரமைக்கும் காலமாகவும், உள்நாட்டு அரசியல் அதிகார சமநிலையை நிர்ணயிக்கும் முக்கிய கட்டமாகவும் அமைய உள்ளது. பல தீர்மானகரமான தருணங்களை சந்திக்கவுள்ள இந்த ஆண்டில், அதிபர் டிரம்ப் எடுக்கும் முடிவுகளே அவரது அரசியல் வலிமையையும், அவரது ஆட்சியின் வரலாற்றுப் புகழையும் நிர்ணயிக்க உள்ளன.