பரவிக் கொண்டிருக்கும் வன்முறைத் தீ : கலவரத்தில் மூழ்கிய வங்கதேசம்
சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வங்கதேச மாணவர் இயக்கத்தின் முன்னணி தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் போராட்டங்களும் கடும் வன்முறைகளும் வெடித்துள்ளன. அந்தச் சூழ்நிலையை விளக்கும் செய்தி தொகுப்பு இதோ.
கடந்த ஆண்டு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக வங்கதேசத்தில் பெரும் அளவிலான மாணவர் எழுச்சி ஏற்பட்டது. இந்தப் போராட்டம் கட்டுப்பாட்டை இழந்து பரவியதன் விளைவாக, பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்த ‘இன்கிலாப் மஞ்சா’ எனப்படும் மாணவர் இயக்கத்தின் தலைவர் 32 வயதான ஷெரீப் உஸ்மான் ஹாடி, ஷேக் ஹசீனாவுக்கு பாதுகாப்பு வழங்கிய இந்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, டாக்காவில் உள்ள ஒரு மசூதியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, முகம் மூடிய மர்ம நபர்களால் ஹாடி துப்பாக்கியால் சுடப்பட்டார். தலையில் கடுமையான காயம் ஏற்பட்ட நிலையில், சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இந்தச் செய்தி வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் தலைநகர் டாக்காவின் முக்கிய சந்திப்புகளில் ஒன்று கூடி, அரசுக்கு எதிராகப் போராட்டங்களைத் தொடங்கினர். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, ஹாடிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கத் தவறியதாகக் குற்றம்சாட்டிய மாணவர்கள், டாக்கா மட்டுமின்றி பல நகரங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
ஹாடியை கொன்றவர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கூறி, நள்ளிரவு நேரத்தில் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தையும், ராஜ்ஷாஹி, குல்னா, சிட்டகாங்கில் செயல்படும் இந்திய துணைத் தூதரகங்களையும் முற்றுகையிட முயற்சி செய்தனர். பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த கூட்டம், வங்கதேசத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக கட்டிடங்கள் மற்றும் துணைத் தூதர்களின் இல்லங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாடியின் கொலையாளிகளை ஒப்படைக்கும் வரை இந்திய தூதரகத்தை மூட வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.
இந்தியாவுக்கு எதிரான கோஷங்களுடன், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் கட்சியைக் குறிவைத்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே, அவாமி லீக் கட்சியுடன் தொடர்புடைய சொத்துக்களும் தாக்குதலுக்கு உள்ளாகின.
மேலும், இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி, வங்கதேசத்தின் முன்னணி செய்தித்தாள்களான ‘புரோதோம் அலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ ஆகிய பத்திரிகைகளின் அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். தீப்பற்றி எரிந்த கட்டிடங்களுக்குள் சிக்கிய 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்டனர்.
இந்த கலவரக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஹாடியின் மரணத்திற்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளன.
இந்த நிலையில், ஹாடியின் மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என தெரிவித்துள்ள இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், அச்சம், வன்முறை மற்றும் ரத்தப் பாய்ச்சலால் ஜனநாயகத்தை அழிக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும், ஹாடி உயிரிழந்த நாளை தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
ஆதாரங்கள் இல்லாத நிலையிலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரை அழைத்து விளக்கம் கேட்டுள்ளதால், இந்தியா–வங்கதேசம் இடையிலான உறவில் புதிய தூதரக நெருக்கடி உருவாகியுள்ளது. ஹாடி சுடப்பட்ட உடனேயே, இது முன்திட்டமிட்ட தாக்குதல் என்றும், தேர்தல் செயல்முறையைத் திசைதிருப்புவதற்காக சதி செய்யப்பட்டுள்ளதாகவும் முகமது யூனுஸ் முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.