பணி நிரந்தரம் கோரிய செவிலியர்கள் – நள்ளிரவில் மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால் கிளாம்பாக்கம் வரை நடைபயணம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை, அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த தனியார் திருமண மண்டபத்திலிருந்து நள்ளிரவில் போலீசார் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கடும் பனிக்கால சூழலில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று செவிலியர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
சென்னையில் பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து விடப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்திலேயே இரவு முழுவதும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மீண்டும் போலீசார் அவர்களை கைது செய்து ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.
அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த செவிலியர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து செவிலியர்கள் மண்டபத்திற்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, இரவு 10 மணிக்கு பிறகு, மண்டபத்தில் தங்கியிருந்த அனைவரையும் போலீசார் ஒருசேர வெளியேற்றினர்.
கடும் குளிரும் பனியும் நிலவிய சூழலில், செல்போன் டார்ச் ஒளியை பயன்படுத்தி, செவிலியர்கள் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின்னர், பனியின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஊரப்பாக்கத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு நடந்தே சென்று அங்கு தங்கினர்.