கொலம்பியாவில் கால்பந்து ரசிகர்கள் இடையே கடும் மோதல்
கொலம்பியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக மைதானம் முழுவதும் கலவரக் களமாக மாறியது.
கொலம்பிய கோப்பை இறுதிப் போட்டி மெடலின் நகரில் அமைந்துள்ள எஸ்டாடியோ அட்டான்சியோ கிரார்டோட் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அட்லெட்டிகோ நேஷனல் மற்றும் டிஐஎம் அணிகள் நேருக்கு நேர் மோதின.
பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் அட்லெட்டிகோ நேஷனல் அணி டிஐஎம் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. வெற்றியை கொண்டாடும் வகையில் அட்லெட்டிகோ நேஷனல் வீரர்கள் மைதானத்தில் கோப்பையுடன் சுற்றிவந்தனர்.
அந்த நேரத்தில், தோல்வியடைந்த டிஐஎம் அணியின் ரசிகர்கள் பாதுகாப்பு தடைகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனால் மைதானம் முழுவதும் குழப்பமும் வன்முறையும் நிலவி, போர்க்களம் போன்று காட்சியளித்தது.