முதல்வர் பதவியில் தொடர்வது உறுதி – சித்தராமையா அறிவிப்பு
கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகத் தான் தொடர்ந்து செயல்படுவேன் என சட்டப்பேரவையில் சித்தராமையா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றபோது, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராகவும், அதன் பின்னர் டி.கே.சிவகுமார் அந்தப் பதவியை ஏற்க வேண்டும் என்றும் உடன்பாடு ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், சித்தராமையா இரண்டரை ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, முதல்வர் பதவி தமக்கே வழங்கப்பட வேண்டும் என டி.கே.சிவகுமார் தனது ஆதரவாளர்களுடன் அழுத்தம் கொடுத்து வந்ததாக தகவல்கள் வெளியானது.
இந்தச் சூழலில், சட்டமன்ற கூட்டத்தின்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அசோகா, இரண்டரை ஆண்டுகளுக்கான முதல்வர் ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் சித்தராமையா, முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டும் பகிர்ந்து கொள்ளும் எந்தவித உடன்பாடும் எப்போதும் செய்யப்படவில்லை என்று மறுத்தார்.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவை காங்கிரஸ் கட்சி மேலிடம் தான் எடுக்கும் என்றும், அதுவரை தான் முதலமைச்சராகப் பதவியில் தொடர்வேன் என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.