தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது: டாஸ்மாக்கில் 3 நாளில் ரூ.789 கோடி மது விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை வெள்ளம் ஓடியது. மூன்று நாட்களில் (சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி திங்கட்கிழமையன்று) மொத்தம் ₹789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக தினசரி சுமார் ₹150 கோடி மதிப்பில் மது விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் இது ₹200 கோடியை எட்டுகிறது; பண்டிகை காலங்களில் ₹250 கோடியைத் தாண்டுவது வழக்கம்.
இந்த ஆண்டு தீபாவளி திங்கட்கிழமையன்று வந்ததால், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. இதனால், மக்கள் கூட்டம் அதிகரித்து, டாஸ்மாக் விற்பனை சாதனை படைத்தது. கடந்த ஆண்டு தீபாவளியில் ₹235.94 கோடி மதிப்பில் மது விற்பனை நடந்த நிலையில், இம்முறை ₹30 கோடி அதிகமாக விற்பனை நடைபெற்றுள்ளது.
மாவட்ட வாரியாக அதிகபட்ச விற்பனை மதுரை மண்டலத்தில் பதிவாகியுள்ளது —
- மதுரை: ₹170.64 கோடி
- சென்னை: ₹158.25 கோடி
- திருச்சி: ₹157.31 கோடி
- சேலம்: ₹153.34 கோடி
- கோவை: ₹150.31 கோடி
டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது,
“தீபாவளி விடுமுறையால் மக்கள் பெருமளவில் கடைகளில் திரண்டனர். இதனால், கடந்த ஆண்டை விட இம்முறை விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது,” என்றனர்.