கொந்தளிக்கும் வங்கதேசம் : ஹாடி மரணத்தால் வெடித்த போராட்டமும் வன்முறையும்
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி உயிரிழந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் கடும் போராட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் பரவி வருகின்றன. இந்த நிலைமை குறித்து விரிவாகக் காணலாம்.
கடந்த ஆண்டு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக வங்கதேசத்தில் பெரும் அளவிலான மாணவர் கிளர்ச்சி உருவானது. இந்த போராட்டம் கட்டுக்கடங்காமல் தீவிரமடைந்ததன் விளைவாக, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இந்த எழுச்சிக்கு முன்னணியில் நின்ற ‘இன்கிலாப் மஞ்சா’ மாணவர் இயக்கத்தின் தலைவராக இருந்த 32 வயதான ஷெரீப் உஸ்மான் ஹாடி, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை வெளிப்படையாக முன்வைத்து வந்தார். மேலும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்க உள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாளே, டாக்காவில் உள்ள மசூதியிலிருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஹாடியை துப்பாக்கியால் சுட்டனர். தலையில் கடுமையாக குண்டு பாய்ந்த நிலையில், அவர் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். இருப்பினும், கடந்த வியாழக்கிழமை அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த தகவல் வெளியானதும், ஹாடியின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் டாக்காவின் முக்கிய சந்திப்புகளில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, ஹாடிக்கு உரிய பாதுகாப்பு வழங்கத் தவறியதாகக் குற்றம்சாட்டிய அவர்கள், தலைநகரம் உட்பட பல பகுதிகளில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர்.
ஹாடியை சுட்டுக் கொன்றவர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், நள்ளிரவில் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தையும், ராஜ்ஷாஹி, குல்னா, சிட்டகாங் ஆகிய நகரங்களில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களையும் முற்றுகையிட முயன்றனர். இதனைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், இந்திய துணைத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரின் இல்லங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், ஹாடியின் கொலையாளிகளை ஒப்படைக்கும் வரை இந்திய தூதரகத்தை மூட வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்தியாவுக்கு எதிராகவும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் கட்சிக்கு எதிராகவும் கடும் கோஷங்கள் எழுந்தன. இதன் ஒரு பகுதியாக, வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியுடன் தொடர்புடைய சொத்துகளையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி வருகின்றனர்.
மேலும், இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, வங்கதேசத்தின் முக்கிய நாளிதழ்களான ‘புரோதோம் அலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைத்துள்ளனர். தீப்பற்றிய கட்டிடங்களில் சிக்கிய 30-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு பத்திரமாக மீட்டனர்.
இந்த வன்முறைக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹாடியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
இதற்கிடையில், வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், ஹாடியின் மரணம் நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனக் கூறியுள்ளார். பயமும் வன்முறையும் ரத்தப்பொழிவும் மூலம் ஜனநாயகத்தை அழிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஹாடி உயிரிழந்த நாளை இனி தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
ஆதாரங்கள் இல்லாத நிலையில் இந்திய தூதரை அழைத்து விளக்கம் கேட்டுள்ள வங்கதேச அரசின் நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே புதிய ராஜதந்திர சிக்கலை உருவாக்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முன்னதாக, ஹாடி சுடப்பட்ட உடனே, இது திட்டமிட்ட தாக்குதல் என்றும், தேர்தல் சூழலைக் குழப்புவதே சதிகாரர்களின் நோக்கம் என்றும் முகமது யூனுஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.