சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் கருப்புக்கொடி போராட்டம்
சென்னையில் மின்சார பேருந்துகளை தனியார் நிறுவனங்களின் ஓட்டுநர்களை கொண்டு இயக்கும் முடிவுக்கு எதிராக, மாநகரின் அனைத்து பணிமனைகளிலும் போக்குவரத்து துறை ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சார பேருந்து சேவையை தனியார் ஓட்டுநர்கள் மூலம் இயக்கும் திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அண்ணாநகர், வடபழனி, பல்லவன் இல்லம், வியாசர்பாடி உள்ளிட்ட சென்னை முழுவதும் உள்ள பணிமனைகளில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஒன்றுகூடி கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது, போக்குவரத்து ஊழியர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழியாகவே பணிநியமனம் செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.