எல்லையில் உறவு குளிர்ச்சி: பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்பு பரிமாற்றம் ரத்து
இந்தியா–பாகிஸ்தான் எல்லையில், சுதந்திர தினம், குடியரசு தினம், தீபாவளி, ரம்ஜான் போன்ற சிறப்பு நாட்களில், இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொள்ளும் மரபு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால், எல்லையில் பதற்றம் நிலவும்போது, இந்நடவடிக்கை வழக்கம்போல ரத்து செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று, ஜம்மு–காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை இந்தியா எடுத்தது.
அதன் பின்னர், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் எல்லையில் இனிப்பு பரிமாற்றம் நிறுத்தப்பட்டது. இதே நிலை தீபாவளி பண்டிகை நாளிலும் தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“எல்லை தாண்டி நடைபெறும் தீவிரவாத நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் வரை, இதுபோன்ற நல்லெண்ண பரிமாற்றங்கள் நடைபெறாது என்ற தெளிவான செய்தியை இந்தியா பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது,” என்றனர்.