மூக்கனூர் ரயில் நிலையம் பழைய இடத்திலேயே அமைக்க முடிவு – கிராம மக்களுக்கு நிம்மதி
தருமபுரி–மொரப்பூர் ரயில்வே திட்டத்தின் கீழ், மூக்கனூர் ரயில் நிலையம் தற்போதுள்ள பழைய இடத்திலேயே அமைக்கப்படவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ரயில் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஒரு குழுவும், அதே இடத்தில் தொடர வேண்டும் என மற்றொரு குழுவும் வலியுறுத்தி வந்ததால் கருத்து வேறுபாடு நிலவியது.
இந்த விவகாரத்தில் தெளிவு பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில், ரயில் நிலையம் பழைய இடத்திலேயே இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு அதிக ஆதரவு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, மூக்கனூர் ரயில் நிலையம் தற்போதைய இடத்திலேயே அமையும் என முடிவு செய்யப்பட்டதால், நீண்ட காலமாக மேற்கொண்ட போராட்டம் வெற்றியடைந்ததாகக் கூறி கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.