சிறுவன் ஓட்டிய இருசக்கர வாகன விபத்தில் 5 வயது குழந்தை உயிரிழப்பு – சிவகங்கையில் சோகம்
சிவகங்கை மாவட்டத்தில் 17 வயது சிறுவன் ஓட்டிய இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமர் – பிரியா தம்பதியரின் மகளான 5 வயது தன்ஷிகா, வீட்டின் முன்பாக மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் வேகமாக ஓட்டி வந்த பைக், தன்ஷிகா மற்றும் அருகில் இருந்த இன்னொரு குழந்தை மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரு குழந்தைகளும் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், தன்ஷிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறுமியின் உறவினர்கள் உடலைப் பெற மறுத்து, திருப்பாச்சேத்தி அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 வயது சிறுவனையும், அவரது தந்தை ஆசை தம்பியையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திய போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ய முயன்று வருகின்றனர்.