கிராம உதவியாளர்களின் கோரிக்கைகள் ரத்தத்தில் எழுதப்பட்ட மனுவாக முதல்வரிடம் அளிக்கப்படும் – சங்கம் அறிவிப்பு
கிராம உதவியாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ரத்தத்தில் எழுதிப் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் இருந்து முதலமைச்சரை சந்திக்கும்வகையில், வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்த பேரணியில் 200-க்கும் அதிகமான கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.
அலுவலக உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையான சம்பளம், கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு பணி நியமனம் உள்ளிட்ட ஐந்து முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பேரணிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் குரு நாகப்பன், திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளாக, தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பல கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியே இந்த பேரணி நடத்தப்பட்டதாகவும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், தங்களது கோரிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ரத்தத்தில் எழுதப்பட்ட மனுவை முதலமைச்சரிடம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் குரு நாகப்பன் தெரிவித்தார்.