இம்ரான் கான் மீது மனிதாபிமானமற்ற சித்திரவதை – மகன்களின் கடும் குற்றச்சாட்டுகள் புதிய சர்ச்சையை உருவாக்கின

Date:

இம்ரான் கான் மீது மனிதாபிமானமற்ற சித்திரவதை – மகன்களின் கடும் குற்றச்சாட்டுகள் புதிய சர்ச்சையை உருவாக்கின

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் மனிதாபிமானம் அற்ற வகையில் உளவியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக, அவரது மகன்கள் காசிம் கான் மற்றும் சுலைமான் இஸா கான் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த விவகாரம் குறித்த விரிவான தகவல்களை இச்செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான், தனது ஆட்சி காலத்தில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினார். பின்னர், நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததன் காரணமாக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அரசியல் எதிரிகள் மற்றும் ராணுவ அமைப்பை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ஊழல் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

‘அல்-காதிர் டிரஸ்ட்’ எனப்படும் நிதி முறைகேடு வழக்கில், இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே, ஏழு மாதங்களுக்கும் மேலாக குடும்பத்தாருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்த அவர், சிறைக்குள் கொல்லப்பட்டதாக தகவல்கள் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த வதந்திகள் அவரது குடும்பத்தினரிடமும், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினரிடமும் கடும் பதற்றத்தை உருவாக்கின. இதனைத் தொடர்ந்து, அவரை நேரில் சந்திக்க குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி, இம்ரான் கானின் சகோதரி உஸ்மா கான் சிறைக்குச் சென்று அவரை சந்தித்தார். பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், இம்ரான் கான் உயிருடன் இருப்பதாகவும், ஆனால் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த நிலையில், இம்ரான் கானின் சிறை நிலை குறித்து அவரது மகன்கள் தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். லண்டனில் வசித்து வரும் அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித்தின் மகன்களான காசிம் கான் மற்றும் சுலைமான் இஸா கான், கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கள் தந்தை முழுமையான தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு உளவியல் ரீதியான அழுத்தங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ராவல்பிண்டியில் உள்ள ஆடியாலா சிறையில் இம்ரான் கான் மனிதாபிமானமற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

காசிம் கான் பேசுகையில், ஹெபடைட்டிஸ் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளுடன் தங்கள் தந்தை வைக்கப்பட்டுள்ளதாகவும், குடிக்கத் தகாத அசுத்தமான தண்ணீரே அவருக்கு வழங்கப்படுவதாகவும் கூறினார். இதனால் தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். மேலும், வரும் ஜனவரி மாதம் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான விசா விண்ணப்பம் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார். சுலைமான் இஸா கானும், தந்தை மனித தொடர்புகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சிறை ஊழியர்களே கூட அவருடன் பேச அனுமதிக்கப்படாத நிலை உள்ளதாகவும், சில நேரங்களில் அவரது தனிமைச் சிறைக்கு மின்சாரம் கூட துண்டிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு முற்றிலும் எதிரானவை என்றும் அவர் வலியுறுத்தினார். இதேபோல், ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி ஒருவரும் நீண்டகால தனிமைச் சிறை தண்டனை மனித உரிமை விதிகளுக்கு முரணானது என பாகிஸ்தான் அரசை எச்சரித்துள்ளார்.

ஆனால், பாகிஸ்தான் அரசுத் தரப்பில் இதனை மறுக்கும் குரலும் எழுந்துள்ளது. பாகிஸ்தான் பிரதிநிதி முஷரஃப் சயீதி, இம்ரான் கானின் மகன்கள் கூறிய குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். கடந்த 860 நாட்களாக சிறையில் உள்ள இம்ரான் கானுக்கு வாரத்திற்கு ஒருமுறை குடும்ப சந்திப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 870 முறை சந்திப்புகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இதனால், இம்ரான் கானின் உண்மையான சிறை நிலை குறித்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், அவரது உடல்நலம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச அளவில் வலுப்பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கிருஷ்ணகிரி அருகே தனியார் பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல் – மூவர் கைது

கிருஷ்ணகிரி அருகே தனியார் பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல் –...

முகப்பேர் : சாலையில் வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டு – பொதுமக்கள் மத்தியில் பதற்றம்

முகப்பேர் : சாலையில் வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டு – பொதுமக்கள் மத்தியில்...

திமுக ஆட்சியின் கொள்கை சமூகநீதி அல்ல – அது கோபாலபுர நலன் மட்டுமே: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியின் கொள்கை சமூகநீதி அல்ல – அது கோபாலபுர நலன்...

2026 BRICS உச்சி மாநாட்டுக்கு இந்தியா தயாராகிறது – மோடியின் எத்தியோப்பியா பயணம் ஏற்படுத்திய திருப்பம்

2026 BRICS உச்சி மாநாட்டுக்கு இந்தியா தயாராகிறது – மோடியின் எத்தியோப்பியா...