முகப்பேர் : சாலையில் வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டு – பொதுமக்கள் மத்தியில் பதற்றம்
சென்னை முகப்பேர் பகுதியில் வீடு மற்றும் சாலையை குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முகப்பேர் பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக பணியாற்றி வரும் மணிவண்ணன் மற்றும் மணிமாறன் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் அவர்களது வீட்டின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியதாக கூறப்படுகிறது. அதீத சத்தத்துடன் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக வீட்டின் ஜன்னல்கள் சேதமடைந்ததுடன், சுவர்களிலும் பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் விரைந்து வந்து, மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இதுவரை புகார் அளிக்காதபோதிலும், போலீசார் தாமாகவே வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அருகிலுள்ள காலி நிலத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் கஞ்சா புகைப்பது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முன்பே புகார் தெரிவித்திருந்ததால், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.