திமுக ஆட்சியின் கொள்கை சமூகநீதி அல்ல – அது கோபாலபுர நலன் மட்டுமே: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
சமூகநீதியை முன்வைத்து அரசியல் பேசும் திமுக அரசு, நடைமுறையில் கோபாலபுர குடும்ப நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருவண்ணாமலை மாவட்டம் கண்ணக்கந்தல் மோட்டூர் பகுதியில் வசிக்கும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்காக கட்டப்பட வேண்டிய தொகுப்பு வீடுகள் இன்னும் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், அதனால் ஆதார் அட்டை, பட்டா, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபடும் அவல நிலைக்கு பழங்குடியின மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தந்தையின் நினைவாக வானளாவிய பேனா சிலையை அமைப்பதற்கும், மகனின் விருப்பத்திற்காக கார் பந்தயப் போட்டிகளை நடத்தும் வகையில் சாலைகளை உருவாக்குவதற்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடத் தயங்காத முதல்வர் ஸ்டாலின், ஏழை எளிய பழங்குடியின மக்களுக்கு அடிப்படை தேவையான வீடுகளை கட்டித் தருவதில் மட்டும் அலட்சியம் காட்டுவது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரம்மாண்ட மேடைகளில் சமூகநீதியைப் பற்றி பெருமை பேசுவதும், விளம்பரங்களில் தங்களை சமூகநீதியின் பாதுகாவலர்கள் என முன்னிறுத்திக் கொள்வதும் திமுக அரசின் வழக்கமாகிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், ஆனால் நிஜ வாழ்க்கையில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் நலனைப் புறக்கணித்து, நாள்தோறும் அவர்களைப் போராட்டத்தில் ஈடுபடச் செய்வதே திமுக அரசின் செயல்பாடாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முடிவில், சொந்த குடும்பத்தின் புகழ் மற்றும் விளம்பரத்திற்கு முன்னுரிமை அளித்து, பழங்குடி சமூகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தும் திமுக அரசின் இந்த நிர்வாகக் கொள்கைக்கு சமூகநீதி என்ற பெயர் பொருந்தாது; அது முழுக்க முழுக்க “கோபாலபுர நீதி” என்றே அழைக்கப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.