திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி தற்கொலை செய்த இளைஞர் – அண்ணாமலை இரங்கல்
திருப்பரங்குன்றம் மலைச் சிகரத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட பூர்ண சந்திரன் சம்பவம் தொடர்பாக, முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முருகப் பெருமானின் ஆழ்ந்த பக்தராக விளங்கிய பூர்ண சந்திரன், திமுக அரசின் இந்து விரோத அணுகுமுறையால் மிகுந்த மனவேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத் தூணில் புனித கார்த்திகை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதே அவரது மன அழுத்தத்திற்கு காரணமாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, மதுரையில் அவர் தீக்குளித்து உயிரிழந்ததாக அண்ணாமலை கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தன்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியதாக குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது இதயம் கனிந்த அனுதாபத்தை தெரிவித்ததுடன், இந்த பேரிழப்பை தாங்கும் மன உறுதியை அவர்களுக்கு இறைவன் வழங்க வேண்டும் என பிரார்த்தித்துள்ளார்.
மேலும், முருகப் பெருமானின் அனைத்து பக்தர்களும் அமைதியுடனும் பொறுமையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும், நீதி உறுதியாக நிலைநாட்டப்படும் என்றும், நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய தீவிரமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என பக்தர்களை பணிவுடன் கேட்டுக்கொண்ட அண்ணாமலை, மனித வாழ்க்கை மிக மதிப்புமிக்கது என்றும், ஒவ்வொருவரின் குடும்பமும் அவர்களை நம்பியே இருக்கிறது என்றும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.