ராமநாதபுரம்: கனமழையால் தீவுப்போல் மாறிய பிரப்பன் வலசை கிராமம் – கண்டுகொள்ளாத நிர்வாகம் என மக்கள் குற்றச்சாட்டு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன் வலசை கிராமம், தொடர் கனமழை காரணமாக மழைநீரால் சூழப்பட்டு தனித்தீவுப்போல் காட்சியளிக்கிறது. கிராமத்திற்குள் புகுந்த மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தேங்கியுள்ளதால், பொதுமக்கள் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக வீடுகளிலேயே முடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பிரப்பன் வலசை கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மழைநீர் முழுமையாக ஊருக்குள் தேங்கியதால் வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. கிராமத்திலிருந்து பிரப்பன் வலசை கால்வாய் வழியாக வேதாளை கடல் பகுதிக்குச் செல்ல வேண்டிய மழைநீர், கால்வாய் பகுதியில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக ஊருக்குள்ளேயே நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் வீடுகளுக்குள் நீர் புகுந்து சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் வீடுகளுக்குள் விஷ பூச்சிகள், பாம்புகள் உள்ளிட்டவை புகுவதால் உறங்க முடியாமல் தவித்து வருவதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை குறித்து கடந்த பல நாட்களாக மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்தும், இதுவரை கள ஆய்வு கூட நடத்தப்படவில்லை என்றும், அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வெளியேறும் வகையில் நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராமம் முழுவதும் நீரில் சூழப்பட்டு தீவுப்போல் காட்சியளிக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.