கடந்த 7 மாதங்களில் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் இல்லை – அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: கடந்த ஏழு மாதங்களாக அமெரிக்காவுக்குள் ஒரு சட்டவிரோத குடியேறியும் அனுமதிக்கப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அந்த உரையில் பேசிய டிரம்ப், ஈரானின் முக்கிய தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை அமெரிக்கா முறியடித்ததாகக் கூறினார். மேலும், கடந்த 10 மாதங்களில் உலகளவில் நடைபெற்ற 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும், காசா பகுதியில் அமைதியை உறுதி செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதிபராகப் பொறுப்பேற்ற உடனேயே அமெரிக்காவின் தெற்கு எல்லையில் நடைபெறும் சட்டவிரோத ஊடுருவல்களைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட டிரம்ப், அதன் பயனாக கடந்த ஏழு மாதங்களாக எந்தவொரு சட்டவிரோத குடியேற்றமும் நிகழவில்லை என்று கூறினார்.
மேலும், அமெரிக்க ராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு போர் வீரர் போனஸ் வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு வீரருக்கும் தலா 1,776 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
டிரம்பின் இந்த உரை, எல்லை பாதுகாப்பு, வெளிநாட்டு கொள்கை மற்றும் ராணுவ நலத்திட்டங்கள் குறித்து மீண்டும் அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.