கனிம வள கொள்ளை தடுப்பு: முழுமையான ஆய்வு அவசியம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கனிம வளங்கள் சட்டவிரோதமாக சுரண்டப்படுவதை கட்டுப்படுத்த தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலங்களை ஆக்கிரமித்து கனிம வளங்களை கொள்ளையடிப்பதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை அபகரித்தவர்களுக்கு வெறும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பதில் எந்த பயனும் இல்லை எனக் கடும் கேள்வி எழுப்பினர்.
கனிம வள கொள்ளையர்கள் மாஃபியா போன்று செயல்பட்டு, அரசின் நிர்வாக அமைப்பையே பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது என்று நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
மேலும், மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்காமல் பார்வையாளர்களாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனைத் தொடர்ந்து, தமிழகமெங்கும் நடைபெறும் சட்டவிரோத கனிம வள சுரண்டலைக் கட்டுப்படுத்த விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் தெளிவான உத்தரவு பிறப்பித்தனர்.