பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் குறிப்பிட்ட அரிய உயிரினம் – உதகையில் உயிருடன் கண்டுபிடிப்பு
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு ஆராய்ச்சியாளரின் தனிப்பட்ட குறிப்பேட்டில் பதிவாகியிருந்த அரிய உயிரினம், இன்றும் நீலகிரி மலைப்பகுதியில் வாழ்ந்து வருவது கண்டறியப்பட்ட சம்பவம், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்சைச் சேர்ந்த உயிரியல் அறிஞரான பியர் சோனராட், 1813ஆம் ஆண்டு புதுச்சேரியில் இருந்தபோது, மூஞ்சுறுவைப் போன்ற ஆனால் தனித்துவம் கொண்ட ஒரு உயிரினத்தை கண்டுள்ளார். அதை அவர் தனது நாட்குறிப்பில் ஓவியமாக வரைந்து, விரிவாக பதிவு செய்திருந்தார்.
பின்னர் அவர் மறைந்ததையடுத்து, அவரது ஆய்வுக் குறிப்புகள் நூல்களாக வெளியிடப்பட்டன. அந்த ஆராய்ச்சியாளரின் நினைவாக, அந்த உயிரினத்திற்கு “சோனராட் ஷ்ரூ” என பெயர் சூட்டப்பட்டது.
நீண்ட காலமாக அந்த உயிரினம் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டு வந்த நிலையில், 2022ஆம் ஆண்டு உதகை படகு இல்லம் அருகே இறந்த நிலையில் ஒரு சோனராட் ஷ்ரூ கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், உதகை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இந்த இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் இன்னும் வாழ்ந்து வருவது உறுதியாகியுள்ளது. அரசு தரப்பில் அனுமதி மற்றும் நிதி ஆதரவு கிடைத்தால், இந்த அரிய உயிரினம் குறித்து விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.