கிறிஸ்துமஸ் நிகழ்வில் மதமாற்றம் முயற்சி என குற்றச்சாட்டு – இந்து அமைப்புகள் போராட்டம்
சிவகங்கை மாவட்டம் அருகே நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் மதமாற்றம் நடைபெற முயற்சி செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிங்கம்புணரி பகுதியில் உள்ள தனியார் எண்ணெய் ஆலையில் கடந்த 14ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை மதம் மாற்ற முயற்சி நடந்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த தகவலை அறிந்த பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஆலை நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆலை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த அமைப்பினரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.