திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: மேலும் இருவர் என்ஐஏ வசம் சிக்கினர்
திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த 6வது குற்றவாளி மற்றும் அவருக்கு பாதுகாப்பளித்த நபரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவரும், பாமக முன்னாள் நகரச் செயலருமான ராமலிங்கம், மதமாற்றத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததன் காரணமாக 2019ஆம் ஆண்டு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் தீவிரத்தையும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, விசாரணை பின்னர் தேசிய புலனாய்வு முகமைக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்குடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான புர்ஹானுதீன், நஃபீல் ஹாசன் உள்ளிட்ட மூன்று பேரை கடந்த வாரம் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த 6வது நபரான, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாவட்டச் செயலர் முகமது அலி ஜின்னா குறித்து தகவல் வழங்குவோருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என என்ஐஏ அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னையில் மறைவாக தங்கி இருந்த முகமது அலி ஜின்னாவையும், அவருக்கு அடைக்கலம் வழங்கிய அஸ்மத் என்பவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.