பிரபல ஹாலிவுட் இயக்குநர் – மனைவி படுகொலை | பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ராப் ரெய்னரும், அவரது துணைவியாரான மிஷேல் ரெய்னரும் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை அதிர்ச்சியிலும் துயரிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த சூழலில், “Trump Derangement Syndrome” எனப்படும் ட்ரம்ப் மனச்சிதைவு நோயே ராப் ரெய்னரின் மரணத்திற்குக் காரணம் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பான விரிவான செய்தித் தொகுப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பிரபலங்கள் அதிகம் வசிக்கும் பிரெண்ட்வுட் பகுதியிலுள்ள ஒரு இல்லத்தில், 78 மற்றும் 68 வயதுடைய தம்பதியர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர்கள் ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மிஷேல் ரெய்னர் என்பதைக் கண்டறிந்தனர்.
ஹாலிவுட் நகைச்சுவை உலகின் முன்னோடியாகக் கருதப்படும் கார்ல் ரெய்னரின் மகனான ராப் ரெய்னர், 1989ஆம் ஆண்டு வெளியான When Harry Met Sally திரைப்படத்தை இயக்கியபோது, அந்தப் படத்தில் புகைப்படக் கலைஞராக பணியாற்றிய மிஷேல் சிங்கர் ரெய்னரை சந்தித்தார். பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நிக், ஜேக் மற்றும் ரோமி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ராப் ரெய்னரின் 32 வயதான மகன் நிக் ரெய்னரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு, ஹாலிவுட் நடிகர் கோனன் ஓ’பிரையன் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்து கொண்டபோது, நிக் ரெய்னருக்கும் அவரது பெற்றோருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் இந்த இரட்டைக் கொலை நிகழ்ந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக, போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட நிக் ரெய்னர், 15 வயதிலேயே மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016ஆம் ஆண்டு வெளியான Being Charlie திரைப்படம், ராப் மற்றும் நிக் ரெய்னர் இருவரின் வாழ்க்கையில் போதைப் பழக்கம் ஏற்படுத்திய தாக்கங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1971ஆம் ஆண்டு நடிகராக திரையுலகில் காலடி எடுத்து வைத்த ராப் ரெய்னர், பின்னர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பல வெற்றிப் படங்களை அளித்துள்ளார். சிறந்த இயக்குநருக்கான கோல்டன் குளோப் விருதை அவர் நான்கு முறை வென்றுள்ளார்.
ராப் ரெய்னர் மற்றும் மிஷேல் ரெய்னரின் திடீர் மறைவால் குடும்பத்தினர் ஆழ்ந்த மனவேதனையில் உள்ளதாகவும், இந்த கடின நேரத்தில் அவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கோரியும் குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ராப் ரெய்னரின் மரணம் குறித்து அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
“ரெய்னரும் அவரது மனைவியும், ட்ரம்ப் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பிறரிடம் வெளிப்படுத்திய கட்டுப்பாடற்ற கோபத்தின் விளைவாகவே உயிரிழந்துள்ளனர்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும், தன்னை நோக்கிய தீவிர வெறுப்பின் காரணமாக ரெய்னர் பொதுமக்களை மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக மாற்றினார் என்றும், தனது நிர்வாகத்தின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் கடும் மனப்பிரமைக்கு ஆளானவர் என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
ஆனால், ரெய்னரின் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் இந்தக் கொலைச் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக காவல்துறை எதையும் உறுதிப்படுத்தாத நிலையில், ட்ரம்ப் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது அவரது கட்சியினரிடமிருந்தும், ஹாலிவுட் பிரபலங்களிடமிருந்தும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராப் ரெய்னரை திருமணம் செய்வதற்கு முன்பு, 1987ஆம் ஆண்டு வெளியான ட்ரம்பின் முதல் மற்றும் அதிகம் விற்பனையான The Art of the Deal நூலின் அட்டைப்படத்திற்காக பயன்படுத்தப்பட்ட புகைப்படத்தை எடுத்தவர் மிஷேல் ரெய்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக அடிக்கடி பிரச்சாரம் செய்த ராப் ரெய்னர், அக்கட்சிக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். தீவிர ஜனநாயக ஆதரவாளராக இருந்த அவர், ட்ரம்ப் மீண்டும் அதிபராக வந்தால், அது அமெரிக்க ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரித்திருந்தார்.
2017ஆம் ஆண்டு துபாய் சர்வதேச திரைப்பட விழாவில், அமெரிக்க அதிபர் பதவிக்கு முற்றிலும் தகுதி இல்லாத ஒரே நபர் ட்ரம்ப் தான் என்றும், அரசு நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள அவருக்கு திறனும் ஆர்வமும் இல்லை என்றும் ராப் ரெய்னர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு முன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமூக ஊடகப் பிரபலமான கிர்க் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், கருத்து வேறுபாடு கொண்டவர்களை அரக்கர்களாக சித்தரிப்பதே அந்த கொலையின் காரணம் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
மேலும், கிர்க்கின் நினைவேந்தல் நிகழ்வில், தனது அரசியல் எதிரிகளை வெறுப்பதாகவும் அவர் கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது.
அதேபோல், 2022ஆம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசி மீது அவரது வீட்டில் அத்துமீறி நுழைந்த நபர் சுத்தியலால் தாக்குதல் நடத்தியபோதும், ட்ரம்ப் இதே போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.