திமுக அரசு செவிசாய்க்குமா? : சீர்கெட்ட நிலையில் பொழிச்சலூர் நூலகம்!
சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியில், மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு நூலகம் இன்று பராமரிப்பின்றி மோசமான நிலையில் தவித்து வருகிறது. 35 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த நூலகம், தற்போது ஏன் இவ்வாறு சீரழிந்த நிலையில் உள்ளது என்பதை விளக்குகிறது இந்த செய்தி.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூரில் இந்த நூலகம் அமைந்துள்ளது. 1988-ம் ஆண்டு, பொழிச்சலூர் குடியிருப்போர் நலச்சங்கம் முன்னெடுத்த முயற்சியால், அப்பகுதி மக்களின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்காக இந்த நூலகம் தொடங்கப்பட்டது.
ஊராட்சி நிர்வாகம் ஒதுக்கிய 10 சென்ட் நிலத்தில், ஐந்தாயிரத்திற்கும் அதிகமான நூல்களுடன் நிறுவப்பட்ட இந்த நூலகத்தை, இன்றளவும் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சமீப காலமாக பெய்த கனமழையின் காரணமாக, நூலகக் கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்து, சுவர்களின் வழியே நீர் ஒழுகி, பல புத்தகங்கள் சேதமடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
நூலகத்திற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசு கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், குறைந்தபட்சம் ஆயிரம் சதுர அடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நூலகம் கட்டித் தர வேண்டும் என, கடந்த ஆறு ஆண்டுகளாக வாசகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விளம்பரங்களுக்காக மக்களின் வரிப்பணத்தைச் செலவிடும் திமுக அரசு, அதனை ஆபத்தான நிலையில் உள்ள நூலகங்களைச் சீரமைக்க பயன்படுத்த வேண்டும் என்றும், பொழிச்சலூர் நூலகத்தை முழுமையான நவீன நூலகமாக மாற்றித் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.