நடுக்கடலில் கவிழ்ந்த பைப்பர் படகு : உயிர் தப்பிய 4 மீனவர்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்பகுதியில் நடுக்கடலில் சிக்கிய 4 மீனவர்களை, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நாகை பகுதியைச் சேர்ந்த ரகு, பிரசன்னா, முத்துவேல் மற்றும் அன்பரசு ஆகிய நால்வரும், கோடியக்கரை அருகே பைப்பர் வகை படகில் கடலுக்குள் சென்று மீன்பிடி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் திடீரென பலத்த காற்றுடன் சூறாவளி போன்ற நிலை ஏற்பட்டதால், கடல் சீற்றமடைந்து அவர்களது படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் கடலில் விழுந்த மீனவர்கள், கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் காக்க போராடியுள்ளனர்.
அந்த வழியாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மற்ற மீனவர்கள், அவர்களை கவனித்து உடனடியாக உதவிக்கு சென்றனர். பின்னர், நால்வரையும் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.