மாணவர்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்துவது அவமானகரமான செயல் – முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்
கடந்த நான்கரை ஆண்டுகளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மையான ஆட்சியை வழங்காமல், வெறும் விளம்பரக் காட்சிகளிலேயே காலத்தை கழித்து வருகிறார் என, முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, ஏழாம் வகுப்பு பயிலும் ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் மனதை உலுக்கும் வகையில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் அன்புக் குழந்தையை இழந்து துயரில் மூழ்கியுள்ள பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு பள்ளிகளின் கட்டிடங்கள், மேற்கூரைகள், சுற்றுச்சுவர்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் அரசு பள்ளி கட்டிடங்களின் வலிமையை ஆய்வு செய்து, மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என திமுக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், பல அரசு பள்ளிகள் இன்னும் கட்டிடம் இல்லாமல் மரங்களின் கீழ் இயங்கிக் கொண்டிருப்பதையும் தாம் முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை எச்சரிக்கைகள் இருந்தபோதும், முதலமைச்சரோ அல்லது பள்ளிக் கல்வித்துறை அமைச்சரோ இதுகுறித்து சிறிதளவும் அக்கறை காட்டவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பெறும் அரசு பள்ளிகளை, திமுக அரசு முற்றிலும் புறக்கணித்ததன் விளைவாகவே இன்று ஒரு இளம் உயிர் பலியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை ஒரு சாதாரண விபத்தாகக் கருத முடியாது என்றும், இது திமுக அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த கொலைக்கு சமமானது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக விளம்பர அரசியலையே முன்னெடுத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும், இந்த சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இனியும் அரசு பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்யாமல், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறுவது மிகுந்த அவமானகரமான செயல் என அண்ணாமலை கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.