மூச்சுத்திணறலை அகற்றி உயிர் காக்கும் ‘பெரிஸ்’ குழாய் – ஆலங்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தலைமை மருத்துவர் பெரியசாமி, மூச்சு அடைப்பை நீக்கி உடனடியாக பிராணவாயு செலுத்த உதவும் புதிய மருத்துவ கருவியை கண்டுபிடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
மருத்துவத் துறையின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர் பெரியசாமி, இதற்கு முன்பும் பல பயனுள்ள மருத்துவ உபகரணங்களை வடிவமைத்துள்ளார். உலக அளவில் நடைபெற்ற மருத்துவர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமது கண்டுபிடிப்புகளை விளக்கி காப்புரிமை பெற்றதுடன், தேசிய அளவில் மூன்று விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், அவர் உருவாக்கியுள்ள ‘பெரிஸ் மூச்சுக் குழாய்’ என்ற புதிய கருவி மருத்துவ உலகில் கவனம் பெற்றுள்ளது. அறுவை சிகிச்சை நேரத்தில் மயக்க நிலையில் உள்ளவர்களுக்கும், சுயநினைவு இழந்து திடீரென மூச்சுத் திணறல் ஏற்படுபவர்களுக்கும், மூச்சு அடைப்பை அகற்றி உடனடியாக ஆக்சிஜன் வழங்க இந்த கருவி உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக அறுவை சிகிச்சை அரங்கில் நோயாளியின் ஆக்சிஜன் அளவை கண்காணிக்க பல மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், இந்த கருவி இருந்தால் ஒரே மருத்துவரே அவசர நிலையில் உள்ள நபருக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க முடியும் எனவும் அவர் விளக்கினார்.
மேலும், எளிதில் பயன்படுத்தக்கூடிய வடிவில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளதால், அனைத்து மருத்துவர்களும் சிரமமின்றி பயன்படுத்த முடியும் என்றும் மருத்துவர் பெரியசாமி தெரிவித்தார்.