கட்டட உச்சியில் ஏறி உயிரை மாய்க்க முயன்ற பெண் – சக ஊழியரின் சமயோசித செயலில் உயிர் காப்பு
திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில், கட்டடத்தின் மேலே ஏறி தற்கொலை செய்ய முயன்ற பெண் ஊழியரை, உடன் பணிபுரிந்த ஒருவர் புத்திசாலித்தனமான பேச்சின் மூலம் பாதுகாப்பாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உறையூர் அண்ணாமலை நகரில் அமைந்துள்ள வீட்டு பயன்பாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் சோனியா என்ற பெண் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் திடீரென கடை அமைந்துள்ள கட்டடத்தின் மேல் பகுதிக்கு ஏறி, கீழே குதிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், கீழே இறங்குமாறு பலமுறை கேட்டுக் கொண்டாலும், அவர் அதற்கு சம்மதிக்கவில்லை.
அப்போது அதே கடையில் பணியாற்றும் மற்றொரு ஊழியர், அமைதியாக அணுகி, நிதானமாக பேச்சு கொடுத்து, பெண்ணின் மனநிலையை மாற்றி, பாதுகாப்பாக கீழே இறக்கினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், குடும்பத் தொடர்பான பிரச்னைகள் காரணமாக அந்த பெண் இவ்வாறு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்ததாக தெரிவித்துள்ளனர்.