சர்வதேச பயங்கரவாதத்தின் முக்கிய தளமாக பாகிஸ்தான் செயல்படுகிறது – ஐநா மேடையில் இந்தியாவின் கடும் குற்றச்சாட்டு
பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக பாகிஸ்தான் இருந்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் இந்தியா தெளிவாக குற்றம்சாட்டியுள்ளது.
“உலக அமைதிக்கான தலைமைப் பொறுப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில், ஐநாவுக்கான இந்திய தூதர் பர்வதனேனி உரையாற்றினார். அந்த உரையில், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்ததாகவும், இதன் மூலம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக பாகிஸ்தான் செயல்படுவது உலக நாடுகளுக்கு வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எல்லைப் பகுதிகளில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்படும் வரை, பாகிஸ்தானுடன் உள்ள சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவு தொடரும் என்றும் அவர் கூறினார். கடந்த நான்கு தசாப்தங்களாக பாகிஸ்தான் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான நிரபராத இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜம்மு–காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத அங்கமாகும் என்றும் பர்வதனேனி வலியுறுத்தினார். அதேசமயம், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனிருக்கு அந்நாட்டு அரசு அளித்துள்ள விசேட அதிகாரங்கள், பாகிஸ்தானின் ஜனநாயக அமைப்பை பாதித்துள்ளதாகவும் இந்திய பிரதிநிதி கடுமையாக விமர்சித்தார்.