கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை கணிசமாக உயர்வு
பறவைகள் இடம்பெயரும் முக்கிய நுழைவாயிலாகக் கருதப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை, பல்வேறு நாடுகளில் இருந்து இடம்பெயரும் பறவைகள் கோடியக்கரை பகுதிக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் கோடியக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருமளவில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக, செங்கால் நாரை, கூழைக்கிடா, பூ நாரை, கடல் காகம் உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள் ஆயிரக்கணக்கில் சரணாலயத்திற்கு வந்து தங்கியுள்ளன.
வெளிநாட்டு பறவைகள் திரளாகக் கூடியுள்ள இந்தக் காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து ரசித்து செல்கின்றனர்.