கிளாம்பாக்கத்தில் செயல்படாமல் கிடக்கும் நடை மேம்பாலம்
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும், ரயில் நிலையமும் நடை மேம்பாலமும் இன்னும் பயன்பாட்டுக்கு வராததால், அங்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வார நாட்களில் சுமார் 45 ஆயிரம் பேர் வரைவும், வார இறுதிகள் மற்றும் விழாக்காலங்களில் ஒரு லட்சம் பேர் வரைவும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தொடக்க விழாவின் போது, ஒரே ஆண்டிற்குள் ரயில் நிலையப் பணிகள் முடிவடையும் என திமுக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இரண்டாண்டுகள் கடந்த பின்னரும் தற்போது வரை சுமார் 80 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், நடை மேம்பால கட்டுமானப் பணிகளும் தற்போது 60 சதவீத அளவிலேயே முடிவடைந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இதனால், தினந்தோறும் இந்தப் பகுதிக்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகி வருவதால், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு அவசியமான போக்குவரத்து அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.