இந்திய பொருளாதாரம் மந்தமில்லை என்பதை சா்வதேச அங்கீகாரங்கள் உறுதிப்படுத்துகின்றன – நிர்மலா சீதாராமன்
இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலைக்கு செல்லவில்லை என்பதற்கு, உலகளாவிய அமைப்புகள் வழங்கும் அங்கீகாரங்களே தெளிவான சாட்சியாக உள்ளன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய பொருளாதாரம் சரிவடைந்துவிட்டதாக கருத்து தெரிவித்திருந்தார். இதை மேற்கோள்காட்டி, மக்களவையில் மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் விளக்கம் கோரின. அதற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை பல்வேறு சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து அங்கீகரித்து வருவதாக கூறினார்.
சர்வதேச நாணய நிதியம், எஸ் & பி உள்ளிட்ட முன்னணி உலக நிதி நிறுவனங்கள், இந்திய பொருளாதாரம் எதிர்காலத்திலும் உறுதியான வளர்ச்சிப் பாதையில் தொடரும் என மதிப்பீடு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், நடப்பு நிதியாண்டின் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும், முழு நிதியாண்டில் 7.3 சதவீத வளர்ச்சி ஏற்படும் என இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பின்னர் 61.4 சதவீதமாக இருந்த கடன்–ஜிடிபி விகிதம், மத்திய அரசின் திடமான பொருளாதாரக் கொள்கைகளால் 2023–24 நிதியாண்டில் 57.1 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், இந்த நிதியாண்டு முடிவில் அது 56.1 சதவீதமாக மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், 2014–15ஆம் ஆண்டில் பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 46,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2023–24ஆம் ஆண்டில் அது 1 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், மின்னணு சாதனங்கள், வாகன உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளிலும் இந்தியா கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக கூறிய நிர்மலா சீதாராமன், இத்தனை ஆதாரங்கள் இந்திய பொருளாதாரம் வலுப்பெற்று வருவதை நிரூபிக்கும் நிலையில், ஒருவரின் கருத்தை மட்டும் வைத்து வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஏற்க முடியாது எனத் தெளிவுபடுத்தினார்.